வியாழன், 30 ஜூலை, 2015

மேகி தடையால் முதல் முறையாக நஷ்டம் கொடுத்த நெஸ்லே

இந்த காலாண்டில் மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட நிதி அறிக்கை நெஸ்லே நிறுவனத்தின் முடிவுகள் தான்.


கடந்த மாதங்களில் மேகி நூட்லஸ் தயாரிப்பிற்கு ஏற்பட்ட தடையால் நிறுவனம் துவண்டு போய் உள்ளது.நெஸ்லே நிறுவனமே நிதி அறிக்கையைக் கொடுக்கும் முன் கடந்த வருட நிதி அறிக்கையுடன் ஒப்பீடாதீர்கள் என்று சொல்லி விட்டார்கள்.

இதனால் வளர்ச்சி எதிர்பார்ப்பை விட எவ்வளவு லாபம் குறையும் அல்லது நஷ்டத்திற்கு செல்லுமா என்று தான் எதிர்பார்ப்பு இருந்தது.

இறுதியாக வெளிவந்த நிதி அறிக்கையில் 64 கோடி ரூபாய் நஷ்டம் காட்டி உள்ளார்கள். கடந்த வருடத்தில் இதே காலக்கட்டத்தில் 287 கோடி ரூபாய் லாபம் காட்டி இருந்தார்கள்.

கடந்த இருபது வருடங்களில் ஒரு முறை கூட இந்த நிறுவனம் நஷ்டக்கணக்கு காட்டியது கிடையாது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இதில் மேகியை கடைகளில் இருந்து திரும்பபெற்று அழிப்பதற்கு 451 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

இது ஒரு முறை மட்டும் ஆகும் செலவு என்பதால் அதைக் கழித்து பார்ப்போம்.

அப்படி என்றால், 387 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்ததாக கருதிக் கொள்ளலாம். அதனால் மறைமுகமாக லாபம் 34% அதிகரித்துள்ளது.

அதனால் தான் என்னவோ சந்தை நெஸ்லே பங்கை அதிக அளவு எதிரமறையாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இந்தக் காலாண்டில் 20% அளவு மொத்த விற்பனை குறைந்துள்ளது என்பதில் தான் மேகியின் வீழ்ச்சி தெரிகிறது. மற்ற பிரிவுகள் தான் கொஞ்சம் காப்பாற்றியுள்ளது.

இதற்கு முன் பப்பெட் பொன்மொழிக்குள் மலிவாக வரும் Nestle பங்கு என்ற கட்டுரையில் ஒரு நல்ல நிறுவனம் பிற காரணங்களால் வீழ்ச்சி அடைந்தால் அது ஒரு வாங்குவதற்கான வாய்ப்பு என்று கூறி இருந்தோம்.

ஆனால் இங்கு நிறுவனம் தான் வீழ்ச்சி அடைந்துள்ளது. பங்கு வீழ்ச்சி அடையவில்லை. மற்ற நுகர்வோர் நிறுவனங்களின் மதிப்பீடல்களோடு பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.

நம்மைப் போல் பலர் நினைத்து பங்கை விற்காமல் வைத்து இருப்பார்கள் போல..அதனால் இன்னும் வாங்குவதற்கான வாய்ப்பு உருவாகவில்லை என்றே கருதலாம்.

இந்த பங்கு 5500 ரூபாய்க்கு கீழ் வந்தால் தான் மலிவாக வாங்குவதற்கான நல்ல வாய்ப்பு.

இவ்வளவு ரிஸ்க் உள்ள பங்கை உச்சத்தில் வாங்குவது தேவையல்ல..இன்னும் நீதிமன்றம், வழக்கு, அனுமதி, நுகர்வோர் நம்பிக்கை பெறுதல் என்று பாதை கடினமாக உள்ளது.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக