புதன், 8 ஜூலை, 2015

ஜூன் காலாண்டு முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து சென்செக்ஸ்...

கடந்த வாரம் உலக எதிர்மறை நிகழ்வுகளின் தாக்கத்தை தாங்கி பிடித்த சந்தை இந்த வாரம் அதிக அளவில் திருத்தத்தை எதிர் கொள்கிறது.


நீண்ட நாட்களுக்கு பிறகு பங்குச்சந்தையை நிலவரம் பற்றிய ஒரு பார்வை, இந்த பதிவு குறுகிய கால வர்த்தகம் செய்பவர்களுக்கும் ஓரளவு பயனாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.



முதலில் இது வரை இந்திய சந்தை கிரீஸை ஒரு பொருட்டாகவே நினைத்துக் கொள்ளவில்லை என்பது தெரிந்து இருக்கும்.

இந்திய GDPயில் 1% கூட  கிரீஸை சார்ந்து இருக்கவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் கிரீஸின் திவால் காரணமாக யூரோ சரிந்தால் கொஞ்சம் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்று பார்த்தால் இந்திய ஐடி, மருந்து மற்றும் சில ஆட்டோ நிறுவனங்கள் தான் அதிக அளவு சரிய வாய்ப்பு இருந்தது.

அதிலும் HCL நிறுவனம் அதிக அளவு ஐரோப்பாவை சார்ந்து இருந்தது. அதனால் அவர்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு இது தொடர்பாக ஒரு சிறிய கணக்கு போடுவோம்.

HCL நிறுவனத்தின் 33% வருமானம் ஐரோப்பாவில் இருந்து வருகிறது.அதில் 7% மட்டும் தான் யூரோவை பயன்படுத்தும் நாடுகளில் இருந்து வருமானம் வருகிறது. அதாவது பெரும்பாலான வருமானம் யூரோவை பயன்படுத்தாத பிரிட்டன் மூலம் கிடைக்கிறது.

இவ்வாறு அங்கும் இங்கும் நஷ்டங்கள் சமநிலைப்படுத்தப்பட்டு விடுவதால் இறுதியில் இரண்டு முதல் மூன்று சதவீதமே லாபம் பாதிக்கப்பட வாய்ப்பு வருகிறது. இதனால் அதிக அளவு தாக்கமுள்ள HCL பங்கு கூட பெரிய எதிர்வினையைக் காட்டவில்லை.

இந்த நிலை தான் மற்ற நிறுவனங்களிடமும் நீடித்தது என்று சொல்லலாம். அதனால் சந்தையிலும் தாக்கம் குறைவாக இருந்தது.

அடுத்து, இன்று சீனாவை அடிப்படையாக வைத்து சந்தை 400 புள்ளிகள் அளவு கீழே இறங்கி உள்ளது. நாளை இது பற்றி விவரமாக எழுதுகிறோம்.

இதனை ஒரு விதமாக பார்த்தால் உலக அளவில் எதிர்வினையாக அணுகலாம். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை எதிர்மறை தாக்கத்தை விட நேர்மறை பலன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சில மாதங்கள் முன்பு தான் சீனாவில் பெரிய அளவில் IPO வெளியீடுகள் வருவதாக இருந்ததால் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் இருந்து வெளியே கிளம்பி இருந்தன.

ஆனால் தற்போது IPO வெளியீடுகள் சீன அரசு தலையீட்டால் ரத்து செய்யப்ப்பட்டு உள்ளன. அடுத்து பெரிய அளவில் பொருளாதார தேக்கமும் வந்து உள்ளது. இதனால் FIIகளுக்கு அங்கு கதவுகள் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் வேறு எங்கு போவார்கள் என்று பார்த்தால் கொஞ்சம் நல்ல நிலையில் உள்ள அமெரிக்கா மற்றும் இந்தியாவே அதிக அளவு முக்கியத்துவம் பெறும்.

ஆக, சீனாவில் விழும் ஒவ்வொரு அடியும் கூட இந்தியாவிற்கு சாதகமான நிலையே.

அதனால் இந்திய சந்தை தற்போதைய நிலையில் இருந்து பெரிய அளவில் இறங்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் அதே வேளையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு மேலும் ஏறவும் வாய்ப்புகள் குறைவாக உள்ளது என்பதே உண்மையான நிலை.

ஏன் என்று பார்ப்போம்..
 
கடந்த காலாண்டு நிதி முடிவுகள் அவ்வளவு நல்லதாக அமையவில்லை. அடுத்து ஜூன் காலாண்டு கூட பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்பு இல்லை. அதற்கடுத்த காலாண்டில் இருந்து வளர்ச்சி வேகம் கொடுக்கும் என்பது பலரது கணிப்பு.

இந்த சூழ்நிலையில் சென்செக்ஸ் புள்ளிகளின் மதிப்பீடலை பார்ப்போம்.

தற்போது சென்செக்ஸ் புள்ளிகளில் இருக்கும் 30 நிறுவனங்களின் Earnings Per Share மதிப்பு 1350 ரூபாய்க்கு அருகில் வருகிறது. இதனை 28,500 புள்ளிகளில் வைத்து பார்த்தால் P/E மதிப்பு 22க்கு அருகில் வருகிறது.

ஆனால் இது வரை வரலாற்றி ல் சென்செக்ஸ் P/E மதிப்புசராசரியாக 18~19 மதிப்பிலே வர்த்தகமாகி வந்துள்ளது.

அந்த கணக்கீடுகளின் அடிப்படையில் 27,500 புள்ளிகள் அளவு என்பது தற்போது நல்ல அடிப்படை மதிப்பாக உள்ளது. இந்த புள்ளிகளில் இருந்து சந்தை மேலும் கீழும் ஊசலாட வாய்ப்பு அதிகம்.

சென்செக்ஸ் நிறுவனங்களுக்கு ஜூன் காலாண்டில் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை லாபம் அதிகரிக்கும் எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு நடந்தால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 28,௦௦௦ முதல் 28,500 வரை உள்ள நிலை ஒரு நல்ல அடிப்படை நிலையாக மாறலாம்.

அதற்கடுத்த காலாண்டுகளில் நிறுவனங்களின் லாபம் அதிக அளவில் பெருகும் என்பது தொடர்ச்சியான கணிப்பு. அப்படி பார்த்தால் இந்த வருட இறுதியில் 30,000 முதல் 31,000 வரையான நிலை அடிப்படை நிலையாக மாறலாம்.

ஆக, நீண்ட கால நோக்கில் இந்திய சந்தை நல்ல லாபத்தைக் கொடுக்கலாம். இடையில் வரும் கொசுறு செய்திகளால் சந்தை குறைந்தால் வாங்குவதற்கான வாய்ப்புகள் என்று கருதிக் கொள்ளலாம்.

அதனால் உங்கள் முதலீடுகளையும் அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளுங்கள்!

தேவை மற்றும் விருப்பம் இருந்தால் எமது ஜூலை மாத போர்ட்போலியோ சேவையில் இணையுங்கள்.

மேலும் விவரங்களுக்கு,
ஜூலை போர்ட்போலியோ தொடர்பான அறிவிப்பு

muthaleedu@gmail.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக