ஞாயிறு, 5 ஜூலை, 2015

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா - 2

அலிபாபா நிறுவனர்  ஜாக் மா அவர்களின் தன்னம்பிக்கை வெற்றி பற்றிய இந்த கட்டுரையின் முந்தைய பாகத்தினை இங்கு படிக்கலாம்.
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா


மீதி இரண்டிற்கும் அந்த சமயத்தில் எந்த நிறுவனங்களுமே இல்லை. ஜாக் மாவிற்கு வாய்ப்பும் அந்த புள்ளியில் தான் கிடைத்தது.

சீனாவை பொறுத்த வரை அப்பொழுது தான் ஏற்றுமதி பொருளாதரத்திற்கு மாறி இருந்தது. அதாவது அதிக அளவில் சீனாவின் குறுந்தொழில் நிறுவனங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தன.இது தான் வாய்ப்பு என்று ஜாக் மா நினைத்தார். சீனாவில் இருக்கும் பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களையும், உலகம் முழுவதும் அவர்களுக்கு இருக்கும் நுகர்வோர் நிறுவனங்களை மறு முனையில் இணைத்து ஒரு இணையதளத்தை திட்டமிட்டார்.

இந்த B2B என்ற முறையை மையமாக வைத்து தான் அலிபாபா தொடங்கப்பட்டது.


சீனாவிற்கும் அலிபாபா என்ற பெயருக்கும் சம்பந்தம் கிடையாது. பிறகு ஏன் அலிபாபா என்று பெயர் வைத்தார் என்ற சந்தேகம் வரலாம்.

கலிபோர்னியாவில் ஒரு கபேயில் காபி குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இதழில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையை பார்க்க முடிந்தது. வளைகுடா நாட்டுக் கதை உலகம் முழுவதும் தெரிந்து இருப்பதை ஆச்சர்யமாக பார்த்தார். அதனால் அலிபாபா கதாபாத்திரத்தை பயன்படுத்தினால் என்ன என்ற ஆர்வம் வந்தது.

வெளியில் வந்து வெவ்வேறு நாடுகளை சார்ந்த மக்களிடம் அலிபாபா தெரியுமா? என்று கேட்டார். பலருக்கும் தெரிந்து இருந்தது. இது போக, அலிபாபா என்பது ஆங்கில அகர வரிசையில் முதலில் வரும். அதனால் தேடலில் முதலில் வரும் என்று நம்பினார்.

இந்த காரணங்களால் அலிபாபாவை தேர்ந்தெடுத்தார்.

இதனால் தான் ஜாக் மா பெயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம்.

சரி. பிசினஸ் ஐடியா தயார். அதற்கு முதலீடு செய்ய ஆட்கள் தேவை. குடும்பத்தினர், நண்பர் என்று 24 பேரை தனது அபார்ட்மேண்டில் கூட்டத்தைக் கூட்டினார்.

அப்பொழுது இன்டர்நெட் மீது பலருக்கு நம்பிக்கை இல்லை. அது போக சீனாவில் அவ்வளவாக இன்டர்நெட் தொழில்நுட்பம் பற்றி தெரியாத காலக்கட்டம்.

அதனால் 24 பேரில் 23பேர் இது வேலைக்கு ஆகாது என்று கூறினார். ஒருவர் மட்டும் தான் நம்பிக்கை தரும் விதமாக முயற்சிப்போம். தோல்வி அடைந்தால் விட்டு விடுவோம் என்று கூறினார்.

அந்த நம்பிக்கையில் தான் அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்தார்.முதலில் சில வருடங்கள் அதிக அளவில் முதலீடுகளை திரட்ட வேண்டி இருந்தது. ஆனால் நான்காவது வருடத்தில் நிறுவனம் லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்தது.

இ-வணிகத்தில் காசு கொடுப்பவரும், பொருளை கொடுப்பவரும் யார் என்றே தெரியாது. அதனால் நம்பிக்கை தான் இங்கு மூலதனம். இதனை அலிபாபா இன்று வரை பின்பற்றி வருகிறது.

இதனால் தமக்கென்று paypal போன்ற பணம் செலுத்தும் முறையை உருவாக்கினார். இதற்கு பெயர் Alipay.

இதில் உள்ள விசேசம் என்னவென்றால் நாம் ஆர்டர் செய்யும் பொருள் வந்து சேரும் வரை நமது பணம் HOLD என்ற நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். திருப்தியான பிறகே அனுப்பியவருக்கு பணம் போய் சேரும். இதனால் நம்பிக்கையோடு பலர் இணைய ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்கள் வளர்ச்சி மடங்குகளில் அதிகரிக்க ஆரம்பித்தது.

அடுத்து, அமேசான், ஈபே போன்று நுகர்வோருக்கு நேரடியாகவே  பொருட்களை விற்கும் Taobao என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்த நிறுவனத்தின் வெற்றி ஒரு கட்டத்தில் ஈபேயை சீனாவை விட்டு முழுமையாக வெளியேற செய்தது.

இதன் தொடர்ச்சியாக கூகுள் போன்று தேடல் இயந்திரம், அமேசான் வழங்கும் Cloud Computing சேமிக்குமிடம், Whatsapp போன்று மொபைல் மென்பொருள் என்று பல இண்டர்நெட்டை சார்ந்த பல முறைகளில் தமது நிறுவனத்தை விரிவாக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு தான் இவரது நிறுவனம் அமெரிக்க சந்தையில் IPO வெளியீடாக வெளிவந்தது. உலகின் மிகப்பெரிய IPO என்ற பெயரை பெற்றது. இந்த பங்கு வெளியீடு, சீனாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் ஜாக் மாவை மாற்றியது.

நீயா நானா கோபிநாத் ஒரு புத்தகத்தில் செல்வந்தராக மனமும் செல்வமாக இருக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார். பப்பெட், பில்கேட்ஸ், ஜுன்ஜுன்வாலா என்று பல பெரிய பணக்கார்களிடம் இதனை கவனித்து இருக்கலாம்.

அதை போல் அலிபாபா தமது ஒவ்வொரு வருட வருமானத்தில் 0.5% பகுதியை சமூக சேவைக்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறது.

பொதுவாக பங்குசந்தைகளில் நிறுவனம் வரும் போது நிறுவன தலைவர் தான் மணியசைத்து வர்த்தகத்தை துவக்கி வைப்பார். ஆனால் இவர் தனது நிறுவனத்தின் எட்டு நுகர்வோர்களை வைத்து பங்கு வர்த்தகத்தை துவக்கி வைத்து இருந்தார்.

இவரது வளர்ச்சி எல்லாமே 15 வருடங்களில் அவருக்கு கிடைத்தது தான். புதிய ஐடியா, துணிச்சல், தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஜாக் மாவே ஒரு உதாரணம்.

ஒன்றைக் கவனியுங்கள், ஜாக் மாவிற்கு துளி அளவு கூட கணினி மென்பொருள் அறிவு கிடையாது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தில் புதிய ஐடியாக்களும், மேலாண்மையும் தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அடுத்து தனது பார்வையை இந்தியா நோக்கித் தான் திருப்பியுள்ளார். ஏனென்றால் சீனா பத்து ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்ததை போல் உள்ள நிலையில் இந்தியா தற்போது உள்ளது. அதே போன்று வாய்ப்புகள் தற்போது அதிகம் உள்ளதாக கருதுகிறார். அதனால் தான் PayTM போன்ற தளங்களை அலிபாபா வாங்க ஆரம்பித்துள்ளது.

வியாபாரத்தில் B2B, B2C, C2C, C2B என்ற நான்கு முறைகள் இருந்ததாக கூறி இருந்தோம். அதில் ஒரு முறை இன்னும் பயன்படுத்தப்படவில்லை என்பதை ஒரு டிப்ஸாக தருகிறோம். முடிந்தால், அதில் உள்ள வாய்ப்புகளை பற்றியும் யோசியுங்கள்!

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக