ஞாயிறு, 5 ஜூலை, 2015

தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா

தோல்விகள் எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அதில் துவண்டு விடாமல் படிப்பினைகளே என்று நினைத்து அடுத்த நிலைக்கு சென்றவர்கள் வாழ்வில் பெருவெற்றியை பெற்றிருக்கின்றனர்.


அதில் ஒருவர் தான் சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிபாபா நிறுவனத்தை தோற்றுவித்த ஜாக் மா. (Jack Ma)



அவரது தனிப்பட்ட வாழ்க்கை பலருக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

சீனாவின் கிழக்கு மாகாணம் ஒன்றில் தான் ஜாக் மா பிறந்தார். அவர் பிறந்த போது சீனா தீவிர கம்யூனிசம் காரணமாக பிற நாடுகளில் இருந்து விலகி ஒரு தனி உலகத்திலே இருந்தது.


எல்லாருக்கும் எல்லாம் சொந்தம் என்ற கொள்கை காரணமாக அந்த காலகட்டத்தில் சீனாவில் பெரிய பணக்காரர்களை பார்ப்பது அபூர்வம். ஒரு அடி நிலம் கூடம் ஒருவருக்கும் நிரந்தரமாக கிடையாது.

அப்பொழுது ஜாக் மா பிறந்த குடும்பமும் ஒரு நடுத்தர குடும்பம் தான். மூன்று குழந்தைகளை உடையது. டீ ஹவுஸ் என்பதை குடிசை தொழிலாக நடத்தி வந்த குடும்பம்.

ஜாக் மாவை பொறுத்த வரை தோல்விகளின் தொடர் கதை தான் அவர். ஆமாம் அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ தோல்வி தான்.

பள்ளிப்படிப்பில் ஒன்றும் பெரிய அளவு புத்திசாலி இல்லை. பள்ளிப் படிப்பை முடித்து ஆங்கில மேற்படிப்பு பெறுவதற்காக கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு செல்கிறார். அங்கு இரண்டு முறை தோல்வி. மூன்றாவது முறையில் தான் வெற்றி பெற முடிந்தது.

கல்லூரி படிப்பை முடித்து வேலையை தேடுகிறார். அதில் முதல் 12 நேர்முகத்தேர்வுகளில் தேர்வு செய்யப்படவில்லை.

அதில் ஒன்று KFC உணவகத்துக்கு சென்ற நேர்முகத்தேர்வு. இன்டர்வியூவிற்கு 24 பேர் வந்திருக்க, அதில் 23 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. அந்த ஒருவர் தான் ஜாக் மா.



இறுதியாக அவரே ஆங்கிலத்தை அதிக அளவில் பேசும் பொருட்டு டூரிஸ்ட் கைடாக வேலை பார்க்க ஆரம்பித்து விட்டார். அதிகாலையில் ஹோட்டல்களுக்கு சென்று வெளிநாட்டவரை பார்ப்பதும் பேசுவதும் முக்கிய வேலையாக இருந்தது. அதில் தான் மேலை நாட்டு கலாச்சாரங்களை அறிய முடிந்தது.

அங்கு வந்த ஒருவர் இவருடைய மா யுன் என்ற பெயரை மாற்றி எளிதான உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஜாக் மா(Jack Ma) என்ற ஆங்கில பெயரை கொடுத்தார்.

ஜாக் மாவும் பெயருக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பவர்.  பின்னர் அலிபாபாவின் பெயர்க்காரணத்திற்கு அவர் கூறும் விளக்கத்தில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம். அதனால் ஜாக் மா என்பதையே அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்.

சுயதொழில் முனைவதில் இருந்த ஆர்வம் காரணமாக  சீனாவில் ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கிறார்.அந்த நிறுவனம் மூலம் 1995ல் ஒரு கட்டுமான பணிக்கான மொழி பெயர்ப்பு வேலைக்காக அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அங்கு அமெரிக்க நண்பர் மூலமாக இண்டர்நெட்டை முதல் முதலாக பார்க்கிறார். அதில் உள்ள தேடு பொறியில் பீர் என்று தேடுகிறார். பல நாடுகளின் பீர் தொடர்பான விவரங்கள் வருகிறது. ஆனால் சீனா தொடர்பாக எந்த விவரங்களையும் காணோம்.

சீனாவில் இன்டர்நெட் தொடர்பானவற்றிற்கு மிக அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதை அங்கு தான் உணர்கிறார்.

அதன் பிறகு ஒரே நாளில் அமெரிக்க நண்பர்கள் உதவியோடு சீன மொழியில் ஒரு மிக எளிதான இணைய தளத்தை உருவாக்குகிறார்.

அந்த தளம் இன்டர்நெட்டில் வந்த ஒரு நாளிலே ஐந்து மின் அஞ்சல்கள் வருகின்றன. எங்களுக்கும் இதே போல் சீனா மொழியில் தளத்தை உருவாக்கி தாருங்கள் என்ற வேண்டுகோளோடு அந்த மின் அஞ்சல்கள் வந்திருந்தன. இந்த நிகழ்வு அவருக்கு மேலும் நம்பிக்கையைக் கொடுத்தது.

இதனால் சீனா வந்த பிறகு நண்பர்கள், குடும்பத்தினரிடம் கடன் வாங்கி ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் China Yellow Pages என்ற நிறுவனத்தை உருவாக்குகிறார். அது ஒரு வருடத்தில் நல்ல வருமானத்தை ஈட்டிக் கொடுத்தது.

அடுத்து தான் அலிபாபா நிறுவனம் தொடங்கும் ஐடியா கிடைக்கிறது. அந்த சமயத்தில் ebay தான் இணைய வணிகத்தை ஆட்டி படைத்தது இருந்தது. அதே போன்றதொரு நிறுவனத்தை தொடங்குவது தான் ஜாக் மாவின் எண்ணம்.



ஆனால் பிசினஸ் மாடல்லை வேறு விதமாக யோசித்தார். அது சீனாவிற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

எந்தவொரு பிசினஸ் முறையிலும் நான்கு விதமாக வியாபாரங்கள் கையாளப்படுவதுண்டு. இதனை மேலாண்மையில் B2B, B2C, C2C, C2B என்று வகைப்படுத்துவார்கள். இதில் B என்பது Business என்பதையும், C என்பது Consumer என்பதையும் குறிக்கும்.

அதாவது ebayயில் ஒரு நுகர்வோர் தான் பயன்படுத்திய பொருளை ஏலம் முறையில் மற்றொரு நுகர்வோருக்கு விற்பார். இதனை C2C என்று கருதலாம்.

அமேசான் தளமானது நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கி நுகர்வோர்களிடம் விற்கும். இதனை B2C என்று கருதலாம்.

மீதி இரண்டிற்கும் அந்த சமயத்தில் எந்த நிறுவனங்களுமே இல்லை. ஜாக் மாவிற்கு வாய்ப்பும் அந்த புள்ளியில் தான் கிடைத்தது.

அடுத்த பாகத்தில் தொடரும்..
தோல்விகளை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய அலிபாபாவின் ஜாக் மா - 2

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக