புதன், 8 ஜூலை, 2015

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன? - 2

சீனாவில் பொருளாதார தேக்கம் பரபரப்பாக பேசப்படும் சூழ்நிலையில் அதனைப் பற்றி விரிவாக எழுதுகிறோம். முந்தைய பாகத்தை இங்கே படித்து தொடரவும்..

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

ரியல் எஸ்டேட் படுத்ததால் அடுத்து மக்கள் பங்குச்சந்தையை நோக்கி திசையை திருப்பி இருந்தனர்.



இது போக, சீன அரசும் பங்குச்சந்தைக்கு சாதகமாக சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்து இருந்தது.

கடந்த ஆண்டு வரை சீனாவை பொறுத்த வரை மூடிய பொருளாதாரம் தான் பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் சீன பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டதில்லை.

இந்த நிலையில் கடந்த வருடம் முதல் சீன அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதலீடு செய்ய H-Shares என்று சொல்லப்படும் பங்குகளில் மட்டும் அனுமதி வழங்கியது.

ஆனால் தலையை சுற்றி மூக்கை தொடும் கதையாக ஹாங்காங் சந்தை வழியாக சென்று ஷாங்காயில் முதலீடு செய்ய வேண்டும் என்று பல விதி முறைகள் இருந்தன. இதனால் வெளிநாட்டு முதலீடு நிறுவனங்கள் அங்கு அவ்வளவாக முதலீடு செய்யவில்லை.

இதனால் வெறும் 1% அளவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சீன சந்தையில் முதலீடு செய்து உள்ளனர். இதுவே இந்தியாவில் 25% அளவு பங்குகள் FIIகளிடம் தான் உள்ளன.

இந்த நிலையின் காரணமாகத் தான் சீன பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு என்பது மற்ற பங்குச்சந்தைகளில் முதலீடு பணம் அடிப்படையில் அவ்வளவாக பாதிக்கவில்லை .

ஆனாலும் இந்த வருடம் 104 IPO பங்குகள் 21 பில்லியன் டாலர் அளவிற்கு சீனாவில் வருவதாக இருந்தன. IPOவில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கணிசமாக சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் பல FIIகள் கொஞ்சம் பணத்தைக் கொண்டு கொட்டினர்.

ஆனால் வேறு விதமாக முதலீட்டாளர்கள் IPOவிற்காக சந்தையில் உள்ள மற்ற பங்குகளை விற்று முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இது சீன பங்குச்சந்தை புள்ளிகளை ஆட்டம் காண வைத்து விட்டது.



இதனால் சீன அரசு அணைத்து IPO வெளியீடுகளையும் ரத்து செய்து விட்டனர். இப்படி FIIகள் போட்ட பணம் தான் அங்கு லாக் ஆகி தவிக்க வைத்து விட்டது.

இந்த பணத்தின் ஒரு பகுதி மீண்டும் இந்தியாவிற்கு வர வாய்ப்பு அதிகம் என்பது தான் தற்போதைய ஒரு கணிப்பு.

சீனாவில் வெறும் 1% அளவே FIIகள் முதலீடு சென்று கூறி இருந்தோம். மீதி 85% முதலீடுகளும் சில்லறை முதலீட்டாளர்கள் கையில் இருந்தது. ஆனால் இவர்கள் தானாக கூடிய கூட்டமல்ல.

சீன அரசு விளம்பரங்கள் மூலம் பங்குச்சந்தை முதலீட்டில் ஈடுபட மக்களை தூண்டியது. இதற்காக புரோக்கர் கமிசனை குறைத்தது.

குறுகிய கால பங்குச்சந்தை முதலீடுகளுக்காக Margin முறையில் அதிக அளவு வங்கி கடன்கள் வழங்கப்பட்டன. இந்த கடன் அளவு மட்டும் சீன உள்நாட்டு உற்பத்தியில் 3.2% அளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படி, மக்கள் பங்குச்சந்தையில் ஆசை காட்டப்பட்டு தள்ளப்பட்டனர் என்றே சொல்லலாம். இதனால் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு என்பதைக் காட்டிலும் தின வர்த்தக முறைகளிலே ஆர்வம் காட்டினர். இது பங்குச்சந்தையை   சூதாட்ட வர்த்தகமாகவே மாறியது.

அடுத்து, பணப் புழக்கத்தை அதிகரிக்க வட்டி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டன. இதனை சந்தை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டது. ஆனால் பொருளாதார அடிப்படைகளில் ஏற்றம் இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

இதனால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சீன பங்குச்சந்தை செயற்கையாக 100% உயர்வை சந்தித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அதில் தான் 30% இழப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

அப்படி என்றால் செயற்கையாக உருவாக்கப்பட்ட குமிழ் தான் உடைக்கப்பட்டுள்ளது.

ஒரு குறுகிய காலத்திலே இந்த குமிழ் உடைக்கப்பட்டது என்பது சீனாவிற்கு நல்லது தான். இன்னும் பெரிதாகி உடைக்கப்பட்டு இருந்தால் பாதிப்பு அதிக அளவில் இருந்து இருக்கும்.

சீனா கடந்த முப்பது ஆண்டுகளாக 10%க்கும் மேல் வளர்ச்சியை கொடுத்து வந்துள்ளது. ஆனால் வளர்ச்சி Saturation என்ற நிலையை அடைந்தால் அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சமநிலையில் செல்ல பொருளாதாரம் இயற்கையாகவே முனையும்.

இதனால் தான் வளர்ந்த நாடுகள் 5% வளர்ச்சியையே தற்போது பெரிதாக எண்ணி வருகின்றன.

ஆனால் இதே அளவு வளர்ச்சி எப்பொழுதும் வேண்டும் என்ற ஆசையில் சீன அரசு செய்த செயற்கை முயற்சிகள் தான் ஒரு குமிழை தோற்றுவித்து விட்டது.



சீனா ஒரு மூடிய பொருளாதாரம் என்பதால் கிரீஸ் அளவிற்கு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. அவர்களது கம்யூனிச கூட்டு பொருளாதாரம் விரைவில் யதார்த்தத்தை புரிந்து கொண்டு மீட்டெடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எமது குடும்ப மருத்துவர் லேசான காய்ச்சல் என்று போனால் உடனே மாத்திரைகளை தர மாட்டார். காய்ச்சல் வெளியே வரட்டும் என்று கூறி காக்க வைத்து விடுவார். அது தான் மருந்தும் கூட..

அது போல் இந்த குமிழ் வெடிப்பது சீனாவிற்கும் உலகிற்கும் நல்லது தான்...

சீனாவில் உற்பத்தி குறைந்து உள்ளதால் அங்கு இரும்பு, அலுமினியம் போன்ற உலோகங்களின் தேவை கணிசமாக குறைந்து உள்ளது. அதனால் நமது சந்தையைப் பொறுத்த வரை இந்த உலோகங்களை சீனாவிற்கு ஏற்றுமதி  செய்யும் நிறுவனங்களுக்கு தான் அதிக பாதிப்பு இருக்குமே தவிர மற்ற நிறுவனங்கள் தப்பி விட வாய்ப்பு அதிகம்.

தொடர்பான கட்டுரைகள்:
ராஜன் சொல்லும் 1930 பொருளாதார பேரழிவு என்பது என்ன?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக