செவ்வாய், 28 ஜூலை, 2015

P-Notes என்றால் ஜெட்லி இவ்வளவு பயப்படுவதேன்?

நேற்று சந்தை 500 புள்ளிகளுக்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது. அதற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்பட்டது P-Notes என்பதாகும்.


இதனைப் பற்றி கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.

P-Notes என்பதன் விரிவாக்கம் Participatory Notes என்பதாகும்.



இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் பெரும்பாலும் Foreign Institutional Investor(FII) என்ற வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மூலமாகவே அனுமதிக்கப்படுகின்றன. அவர்கள் முதலில் செபியில் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிவித்து இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால் இந்த பதிவு செய்த FII நிறுவனங்கள் P-Notes என்ற பத்திரங்களை விநியோகிக்கும். இந்த பத்திரங்கள் மூலமாக எவரும் தங்கள் விவரத்தை செபிக்கு தெரிவிக்காமல் முதலீடு செய்யலாம்.

இவர்களைப் பற்றிய விவரங்கள் FII நிறுவனங்களிடம் தெளிவாக இருக்கும். ஆனால் அவர்கள் செபியிடம் பகிர வேண்டும் என்று எந்த விதி முறையும் கிடையாது.

இவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு நாம் திறக்கும் டிமேட் கணக்குகள் போன்ற எதுவும் தேவையில்லை. FIIகளிடம் பத்திரங்கள் வாங்கி அவர்களிடமே விற்று விடலாம். FIIகள் அந்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வர்.

அதாவது ஊர், பேர் தெரியாமல் இந்திய பங்குச்சந்தைக்குள் முதலீடு செய்யும் ஒரு முக்கிய வழி தான் இந்த P-Notes.

இந்த முறை வழியாக கருப்பு பணம் பெருமளவில் புழங்குகிறது என்பது அரசின் கணிப்பு. உண்மையும் கூட..

உச்சநீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணை கமிட்டி(SIT) தான் இது தொடர்பாக விசாரணை செய்து வந்தது.

அவர்கள் தங்கள் அறிக்கையில் P-Notes மூலம் முதலீடு செய்பவர்கள் விவரங்களை செபி FIIகளிடம் இருந்து பெறுவது அவசியமானது என்று பரிந்துரை செய்து உள்ளார்கள்.

இந்த பரிந்துரை அமலாக்கப்படுமோ என்ற அச்சத்தில் தான் FIIகள் நேற்று சந்தையைக் கவிழ்த்து விட்டனர்.

உடனே அருண் ஜெட்லி முதலீட்டாளர்கள் பாதிக்கும் வகையில் அரசு எந்த முடிவையும் எடுக்காது என்று அறிக்கை கொடுத்து அவர்களை சமாதானம் செய்தார்.

அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

இதற்கு முன்பு காங்கிரஸ் அரசு சில நடவடிக்கைகளை P-Notes மீது எடுக்க முற்பட்டனர். அப்பொழுது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையை ஒரே நாளில் 1700 சென்செக்ஸ் புள்ளிகள் அளவு கவிழ்த்தனர்.

அதனால் தான் ஜெட்லி இது தவறு என்று தெரிந்தாலும் நடவடிக்கை எடுப்பதற்கு பயப்படுகிறார்.

ரகுராம் ராஜன் சொன்னது போல் இன்னும் நாம் முதலீடுகளுக்காக வெளிநாடுகளை நம்பி இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

கிராமங்களில் தனி நபர்களிடம் கடன் வாங்கும் போது அவர்கள் சொல்லும் எதற்கும் தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.. அது போல் தான் இந்த நிகழ்வும்.

தேவையும், சூழ்நிலையும் தான் சில சமயங்களில் தர்மத்தை நிலை நாட்டுகின்றன.



ஆனாலும் கடந்த காலத்தை ஒப்பிடுகையில் ஒரு நல்ல முன்னேற்றம் தெரிகிறது. 2007 வருடத்தில் FII முதலீட்டில் ஐம்பது சதவீதத்தை P-Notes ஆக்கிரமித்து இருந்தது. தற்போது இந்த அளவு பத்து சதவீதமாக சுருங்கியுள்ளது.

அந்த வகையில் நமது சந்தையின் சார்புத் தன்மை குறைந்து வருவதை நினைத்து மகிழ்ச்சி அடையலாம்..

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக