புதன், 15 ஜூலை, 2015

விவேகமும் பொறுமையும் சுயதொழிலில் எவ்வளவு அவசியமாகிறது?

இணையத்தில் எமது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக திரட்டிய தகவல்களை கட்டுரை வடிவத்தில் பகிர்கிறோம்,


கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவை பார்த்தால் சிறு நிறுவனங்களை ஆரம்பிப்பவர் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது.



அதற்கு இ-காமெர்ஸ் துறையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். ப்ளிப்கார்ட், ஸ்னேப்டீல் என்று சாதரணமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய நிறுவனங்களாகி விட்டன. இந்த நிறுவனங்கள் பல மடங்கு தன்னம்பிக்கையை மக்களிடம்  விதைத்துள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

மற்றொரு பார்வையில் பார்த்தால்,
முன்பு போல் இல்லாமல் மக்களிடம் பெரிய அளவில் பணப்புழக்கம் உள்ளது. அதே நேரத்தில் ஆரம்ப கட்ட முதலீடு என்பதை விட நல்ல ஐடியாக்களும், அதனை செயல்படுத்தும் திறமையுமே தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.


இப்படிப்பட்ட காரணங்களால் இளைஞர்களிடம் முன்பை விட நல்ல சுயதொழில் ஆர்வம் இருப்பதை அறியலாம். இதற்கு கடந்த இரு வருடங்களில் அதிக அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறு நிறுவனங்களின் எண்ணிக்கையையே சாட்சி.

சரி. இப்படி ஆரம்பித்த எல்லா சிறு நிறுவனங்களுமே பெரிதாக மாறி விடுகிறதா என்றால் இல்லை என்று சொல்லலாம்..

கிட்டத்தட்ட 95% நிறுவனங்கள் ஆரம்பித்த சில வருடங்களிலேயே மூடப்படுகின்றன என்று தான் ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஒழுங்காக திட்டமிடப்படாதலே.

எமது கிராமத்தில் ஒரு கட்டத்தில் எழுநூறு பேருக்கு ஒரு மளிகை கடை கூட இல்லை. அப்பொழுது கடுமையாக தேவை இருந்தது.

அதனால் ஒருவர் கடை ஆரம்பித்தார். நல்ல வியாபாரம்.. அவரும் நல்ல வளர்ச்சி. கண்டார்.

அதைப் பார்த்த பலரும் மளிகை கடை ஆரம்பித்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று அதே மாடலில் நான்கு கடைகள் ஆரம்பித்தனர்..

ஆனால் முதல்வர் பெற்ற வளர்ச்சியை மற்றவர்கள் பெற முடியவில்லை.

இதே கதை தான் பெரிய அளவிலான வியாபாரங்களிலும் இருக்கிறது.

காரணம் பார்த்தால் மற்றவர்கள் வெற்றியை காப்பி அடிக்கும் பழக்கம் நமக்கு தொன்று தொட்டு இருக்கிறது. அதனால் ரிஸ்க் இருக்காது என்று நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையிலே அதான் நல்ல ரிஸ்க் என்று சொல்லலாம்.

அம்பானியாக வேண்டும் என்றால் அம்பானி செய்யும் தொழிலை தான் செய்து அடைய வேண்டும் என்றில்லை.

அதே தொழிலில் நமது சக்திக்கு உட்பட்டு அம்பானியை விட எவ்வளவு சிறப்பாக செய்து விட முடியும் என்பது கேள்விக்குறியே.

அப்படி என்றால், அம்பானிகள், டாடாக்கள் இல்லாத தொழிலை தேர்ந்தெடுப்பது என்பது மிக அவசியமாகிறது.

நமது சினிமாவில் தான் உன் கடைக்கேதிராக நானும் கடை போட்டு உன்னை இல்லாமல் ஆக்குகிறேன் என்று ஸ்கிரிப்ட்ஸ் வரும்.

ஆனால் ஸ்மார்ட்டாக யோசித்தால் அது புத்திசாலித்தனமான செயல் அல்ல.

Ola, Flipkart, Quikr என்ற வெற்றி பெற்ற நிறுவனங்களை பார்ப்போம். எல்லாரும் இ-காமெர்ஸ் துறை என்று பொதுவாக பயணித்தாலும் பயனாளிக்கு கிடைக்ககூடிய பயன் என்பது வேறாக உள்ளது.

அவர்களது ஆரம்பக்கட்டங்களில் பார்த்தால் போட்டியே கிடையாது. அது தான் நாம் துவங்கும் தொழிலில் பாதி வெற்றி என்று சொல்லலாம்.

போட்டி குறைவாக இருக்கும் சமயத்தில் நமது தொழில் தவறு ஏற்பட்டாலும் அதனை திருத்தி அமைப்பதற்கு நல்ல கால அவகாசம் கிடைக்கிறது.

நேற்று கூட DION என்ற மென்பொருள் நிறுவன பங்கு ஒரே மாதத்தில் 100% கூடியது என்று சொல்லி இருந்தோம்.

அதற்கு முக்கிய காரணம் என்று பார்த்தால் போட்டி என்பது இந்திய வங்கி மென்பொருள் துறையில் கிட்டத்தட்ட அவர்களுக்கு பூஜ்யம் தான். அது தான் அவர்கள் வெற்றியும் கூட..

பார்க்க:
ஒரு வருடத்தில் இரண்டு மடங்கு லாபம் கொடுத்த DION

ஒரு மென்பொருளை உருவாக்கி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் காத்து இருந்தார்கள். அந்த மென்பொருள் தேவை என்பது ஒரே நாளில் உயரத்திற்கு சென்றது.

ஒரு வேளை கடந்த வருடமே நம்பிக்கை இழந்து நிறுவனத்தை விற்று இருந்தால் அவர்களது உழைப்பின் பலன் கிடைக்காமலே  போயிருக்கும்.

ஆக, வியாபாரத்தில் வெற்றி என்பது ஒரே நாள், ஒரே மாதம், ஒரே வருடத்தில் கிடைப்பது அல்ல.

அதற்கு அசாத்திய பொறுமை என்பது அதிக அளவில் தேவைப்படுகிறது.



வெற்றி என்பது கடின உழைப்பில் மட்டும் கிடைப்பதல்ல..அதற்கு ஸ்மார்டநெஸ் என்ற விவேகமும் அதிகம் தேவையாகிறது.

அதற்காக எவ்வளவு நேரம் தேவை என்றாலும் செலவழித்து விட்டு அதன் பிறகு களத்தில் இறங்கினால் பாதை எளிதாக இருக்கும்..

தஞ்சாவூரை சேர்ந்த ஒரு இளம் சாதனைத் தமிழர் என்ற ஒரு கட்டுரை ஒன்றரை வருடங்கள் முன் எழுதி இருந்தோம். தற்போது அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

பிரபாகரன் என்ற அந்த இளைஞரது பேட்டி புதிய தலைமுறை மற்றும் மக்கள் டிவியில் அண்மையில் வெளிவந்துள்ளது.

அறிமுகப்படுத்திய முதல் தமிழ் மீடியா என்ற முறையில் அவரது வளர்ச்சியில் முதலீடு தளம் பெருமிதம் கொள்கிறது. வாழ்த்துக்கள் பிரபாகரன்!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக