புதன், 8 ஜூலை, 2015

சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன?

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சீனாவின் பங்குச்சந்தை 30% சரிந்துள்ளது. இதனைத் தடுக்க சீன அரசு எவ்வளவோ முயன்றும் அது சக்திக்கு மீறிய விடயமாக மாறி உள்ளது.


சீனாவை பொறுத்த வரை பொருளாதார வளர்ச்சி குறைவு என்பது இப்பொழுது தான் ஆரம்பித்தது என்று சொல்ல முடியாது.

2008ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடந்த பொருளாதார வீழ்ச்சியில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையிலே வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது.கடந்த சில சகாப்தங்களாக Made in China என்ற பெயரில் சீனாவின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பரவி இருந்தன. ஒரு கட்டத்தில் கிட்டத்தட்ட நாட்டின் 50% GDP வருமானம் ஏற்றுமதி பொருளாதரத்தை தான் சார்ந்து இருந்தது.

ஆனால் 2008 பொருளாதார வீழ்ச்சியில் உலக அளவில் தேவை குறைந்தது. இதனால் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களின் அளவு குறைந்து வருமானம் பாதிக்கப்பட்டது.

இது போக, உலக அளவில் கடுமையான போட்டியின் காரணமாக பொருட்களின் விலைகளை சீனர்கள் கடுமையாக குறைத்து இருந்தனர். சீன பொருட்களின் விலைகளில் இருந்து நாமே இதனை அறிந்து கொள்ளலாம். இதனால் குறைந்த லாப விகிதத்தில் அதிக பொருட்களை விற்று வந்தனர்.

பொருளாதார வீழ்ச்சி வந்த போது அதிக அளவில் பொருட்களை விற்க முடியவில்லை. ஆனால் தேவை குறைவு காரணமாக மேலும் பொருட்களின் விலைகளை குறைக்க நேரிட்டது. அதனால் நஷ்டத்தில் பொருள்களை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இது ஏற்றுமதியை நம்பி இருந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளை நலிவடைய செய்ய வைத்தது.

ஆனால் கம்யூனிச பொருளாதாரத்தை பின்பற்றும் சீனாவில் தொழிற்சாலைகளை மூடுவது என்பது எளிதான விடயமல்ல. அதனால் அரசே தமது வங்கிகள் மூலம் கடன் கொடுத்து நிறுவனங்களை நடத்த ஆரம்பித்தது.

ஆக, வருமானம் இல்லாமல் ஏற்றுமதி மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையில் கடன்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால் 2008ல் இருந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் ஏற்றுமதி மேலே வரவே இல்லை. அதையும் தாண்டி சீன பொருட்களுக்கு போட்டி அதிகமானது தான் மிச்சம்.

இப்படி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட வாராக்கடன்கள் மடங்குகளில் பெருக ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் சராசரியாக தனது உற்பத்திக்கு அதிகமாக மூன்று மடங்கு கடன்களை கொண்டிருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியில் நிறுவனங்கள் மூடப்பட ஆரம்பிக்கும் போது, வேலை இழப்பு அதிகமாக மாறியது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி குறைய ஆரம்பித்தது.

சீன மக்கள் நம்மை விட நல்ல கஞ்சர்கள். ஆமாம் செலவு பண்ணவே மாட்டார்கள். செலவு பண்ணாமல் அதிக அளவில் சேமித்து வைப்பது என்பது அவர்கள் வழக்கமான செயல். சேமித்து வைத்த பணத்தை சீன அரசு வங்கிகள் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து இருந்தன. இப்படி குமிழை சீன வங்கிகள் தான் உருவாக்கி இருந்தது.

நமது ஊரில் தினசரி செலவிற்கு குறைவாக செலவளித்தாலும் காது குத்து, கல்யாணம், சடங்கு என்ற நமது வழக்கமான நிகழ்வுகள் எவ்வளவு பெரிய கஞ்சனையும் செலவு செய்ய வைத்து விடும். அதனால் சீனாவை ஒப்பிடுகையில் நமது உள்நாட்டு செலவுகள் என்பது அதிகம் தான்.. அது தான் பெரிய வீழ்ச்சிகளில் இருந்து பல முறை நம்மைக் காப்பாற்றி இருக்கிறது.

இப்பொழுது தான் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜன் முன்பு மோடியின் Make in India கொள்கை தொடர்பாக செய்த விமர்சனம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதன் சாராம்சம் இது தான்..
"உள்நாட்டில் பயன்பாட்டை அதிகரிக்காமல் வெளிநாட்டு ஏற்றுமதியை மட்டும் சார்ந்து இருப்பது நல்லதல்ல" என்று கூறி இருந்தார். கண்டிப்பாக மோடி இப்பொழுது சீனா மூலம் புரிந்து இருப்பார்.

விவரங்களுக்கு பார்க்க:
Make In India: ராஜன் விமர்சனத்தின் பின்புலத்தில் ஆசிய நாடுகளின் வீழ்ச்சிஅடுத்து,
தொழில் துறை வீழ்ச்சிக்கு பிறகு பாதிப்பு ரியல் எஸ்டேட்டிற்கு மாறியது. அது வரை பல சீனர்கள் சொந்த தேவைக்காக இல்லாமல் முதலீடுகளுக்காக தான் அபார்ட்மென்ட்களை வாங்கி குவித்து இருந்தனர். இது போக புரோக்கர்களின் புண்ணியத்தால் அபார்ட்மென்ட் விலைகள் உச்சத்தில் கொண்டு செல்லப்பட்டு இருந்தன.

ஆனால் மக்களின் வாங்கும் சக்தி குறைய ஆரம்பித்த போது அபார்ட்மென்ட்களை வாங்க ஆள் இல்லை. இதனால் அபார்ட்மென்ட் விலை வாங்கிய விலையை விட குறைய ஆரம்பித்தது.

இப்படி ரியல் எஸ்டேட் படுத்ததால் அடுத்து மக்கள் முதலீடுகளை பங்குச்சந்தையை நோக்கி திசை திருப்பி இருந்தனர்.

அடுத்த பாகத்தில் தோடரும்...
சீனாவின் பங்குச்சந்தை குமிழ் வெடிப்பிற்கு காரணம் என்ன? - 2

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக