செவ்வாய், 7 ஜூலை, 2015

கிரீஸால் விவாதத்திற்கு வரும் ஐரோப்பிய யூனியனின் ஸ்திரத்தன்மை

கிரீஸ் நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பில் 61% வாக்குகள் சர்வதேச மற்றும் ஐரோப்பிய நிதியகங்களின் முடிவுகளுக்கு எதிராக அமைந்துள்ளன.


கிரேக்க அரசியல்வாதிகள் கிரீஸின் பொருளாதார நிலையை ஒரு அரசியல் சூழ்நிலையாகத் தான் பார்க்கின்றனர் தவிர பொருளாதார தீர்வு கொண்டு வரும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.



சர்வதேசத்தை எதிர்த்து பொது வாக்கெடுப்பு நடத்தும் போது என்னென்ன மாற்று வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெளிவு படுத்திய பிறகு ஓட்டெடுப்பிற்கு சென்று இருந்தால் மக்களுக்கும் விவரங்கள் தெரிந்து இருக்கும்.

இப்பொழுது சர்வதேசத்தை எதிர்த்து மக்கள் ஓட்டு அளித்து விட்டார்கள். ஆனால் தற்போது மீண்டும் ஐரோப்பிய யூனியனிடம் பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளார்கள். இதனைத் தான் முதலிலும் செய்து கொண்டு இருந்தார்கள். என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.

உத்தரகாண்ட் அளவுள்ள கிரீஸ் இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி அளவிற்கு கடன் வாங்கி குவித்துள்ளது. தற்போது மேலும் கடன் தான் கேட்கிறார்கள் தவிர எப்படி தீர்ப்பது என்ற ஒரு உருப்படியான ஐடியாவை கிரீஸ் கொடுக்கவில்லை.

உண்மையில் நான்கு வருடங்களுக்கு முன்னரே திவாலாக வேண்டி இருந்த கிரீஸ் சர்வதேச மற்றும் ஐரோப்பிய நிதியகங்களால் தான் காப்பாற்றப்பட்டு வந்தது.

அதே சமயத்தில் இதே அளவு பிரச்சினையில் சிக்கிய அயர்லாந்து இன்று அதிக அளவு முன்னேற்றத்தைக் காட்டி உள்ளது. அதே போல் போர்சுக்கல் பல நடவடிக்களை எடுத்துள்ளது. பிரான்ஸ், இத்தாலி தயாராகி உள்ளது.

ஆனால் கிரீஸோ இன்னும் கடனைக் கொடுங்கள் என்று கையேந்தி உள்ளது.

கடன் கொடுப்பவன் எந்த நம்பிக்கையில் கடன் கொடுப்பான் என்பது தான் இங்குள்ள பிரச்சினை..

தொன்னூறுகளில் ஐரோப்பிய யூனியன் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாயிரத்தில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வளவு நாள் இந்த அமைப்பு சென்றதே சாதனை தான்.

பொதுவாக ஐரோப்பிய நாடுகள் பல நூற்றாண்டுகள் முன்னரே வளர்ந்த நாடுகள் என்ற அடையாளத்தை பெற்று விட்டன. அறிவியல், கலாச்சாரம் என்று பார்த்தால் கிழக்கை விட அவர்கள் முன்னேறி உள்ளார்கள்.

இதன் காரணமாக ஏற்படும் ஈகோ தான் உலகப்போருக்கு கூட காரணமாக போனது. அந்த ஈகோவையும் தாண்டி ஐரோப்பிய நாடுகளை அரசியல் ரீதியாக இணைத்தது ஐரோப்பிய யூனியனின் ஒரு சாதனை தான்.

ஆனால் யூரோ நாணயம் போன்ற பொருளாதார இணைப்புகள் தொடர்ந்து பிரச்சினைக்கு தான் உள்ளாகி வருகின்றன.

டாலருக்கு மாற்றாக போட்டியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் யூரோ நாணயம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் முழுவதுமான வெவ்வேறு நிதி அமைப்புகளை கொண்டுள்ள நாடுகளை ஒரே பொருளாதார குடையின் கீழ் கொண்டு வருவது சவாலானது. கடுமையான பொருளாதார சூழ்நிலைகளில் இந்த நாடுகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமானது.

பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் இணைக்கப்பட்ட போது இணைக்கப்பட்ட ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான சீர்குலைவு அடைந்தது.

இதற்கு கம்யூனிச பொருளாதரத்தை பின்பற்றிய கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியை விட மிகவும் பின் தங்கி இருந்தது தான் முக்கிய காரணமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனி வளரும் வரை மேற்கு காத்திருக்க வேண்டியதாயிற்று.



அப்படி என்றால் பொருளாதரத்தில் ஒன்றுக்கொன்று சாராத 28 நாடுகள் இணையும் போது அதில் எந்த ஒன்றில் பாதிப்பு வந்தாலும் மொத்த அமைப்பையும் பார்க்கிறது. இதனை சமாளிப்பது என்பது எளிதல்ல.

அதிலும் கிரீஸ் போல் முரண்டு பிடிக்கும் நாடு வந்தால் கேட்க வேண்டாம்.

இதனால் தான் பிரிட்டன் கூட ஐரோப்பிய யூனியனில் பாதி இணைந்தும் இணையாமலும் தன்னுடைய பவுண்ட்டை விடாமல் உள்ளது.

அதனால் அரசியல், கலாசார ரீதியாக ஐரோப்பிய யூனியன் இணைந்து இருப்பது நல்லது. ஆனால் பொருளாதார ரீதியாக ஒரே நாணயம், ஒரு கொள்கை என்பது எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது சந்தேகத்திற்கு உரியது தான்.

இந்த சமயத்தில் கீழே உள்ள இந்திய வரலாற்று நிகழ்வும் பொருத்தமாக இருக்கும்.

இந்தியா சுதந்திரம் அடைந்த போது மற்ற எல்லா சமஸ்தானங்களும் மதம் மற்றும் மன்னராட்சியை மையமாக வைத்து இந்தியாவுடன் இணையாமல் முரண்டு பிடித்தன.

ஆனால் திருவதாங்கூர் மகராஜா மட்டும் வேறு ஒரு பொருளாதார காரணத்தைக் காட்டி இந்தியாவுடன் இணைய மறுப்பு தெரிவித்தார்.

அதாவது,
"நாங்கள் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் பல மடங்கு பிந்தி இருக்கும் பீகார் போன்ற சமஸ்தானங்களுடன் இணைக்கும் போது அவர்கள் மேல் வரும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமே!" என்று கூறினார்.

அது போல இன்னும் பீகாரும் மேலே வரவில்லை. தென் இந்தியாவும் தனது சக்திக்கும் குறைவான வேகத்தில் சென்று கொண்டு காத்திருப்பு நிலையிலே இருக்கிறது.

நாடுகளைப் பொறுத்த வரை கூட்டுக் குடும்பம் என்பது பாதுகாப்பு காரணத்தை தவிர மற்றவற்றில் பெரிதளவு பலன் தருவது இல்லை என்பது தான் யதார்த்தமாக உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்:



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக