வியாழன், 7 மே, 2015

சிறு வயது சிஇஒக்களால் சிக்கல்களில் வளரும் கம்பெனிகள்

சில சமயங்களில் செய்திகளில் 18 வயதில் சிஇஒவாக மாறி விட்டார் என்று ஆச்சர்யமாக பார்த்து இருப்போம்.


ஆனால் அதன் பின் அவர்கள் செய்யும் சிறு வயது வாலிப கோளாறுகள் நிறுவனம் பெரிதாகும் போது கடுமையாகவே பாதிக்கின்றன.

இவ்வாறு நிறுவனர்கள் முதலீட்டாளர்களுடன் செய்யும் மோதல்கள் Venture Capital மூலம் தொடக்க நிலை கம்பெனிகளுக்கு வரும் பணத்தை தடுத்து விடுமோ என்ற அச்சம் வரத் தான் செய்கிறது.



இவ்வளவு நாள் இத்தகைய நிகழ்வுகள் இது வரை வெளிவாரமாலே இருந்தது.

தற்போது Housing.com நிறுவனத்தின் சிஇஒ மூலம் பொதுவிற்கு வந்து விட்டது.

Housing.com நிறுவனத்தின் சிஇஒ ராகுல் யாதவ் IITயில் படிப்பை கடைசி வருடத்தில் விட்டு விட்டவர்.

ஆனாலும் நல்ல தொழில் அறிவு  இருந்தது. இதனால் வீடுகள், மனைகள் வாங்க விற்பதற்கு நண்பர்களுடன் இணைந்து Housing.com என்ற இணையதளம் தொடங்கினார்.

அது ஒரு கட்டத்தில் நல்ல பிரபலமாகவே 1500 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பிடப்பட்டது.

இந்த மதிப்பீடு எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் செய்யப்பட்டது.

இதனால் ஜப்பானின் சாப்ட் பேங்க் முதல் பல முதலீட்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்தன. தற்போது கிட்டத்தட்ட 70% பங்குகள அவர்கள் கையில் தான் உள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் ராகுல் யாதவ் முதலீட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் அவரது முதிர்ச்சியின்மையைத் தான் காட்டி இருக்கும்.

கடிதத்தின் சாராம்சம் இது தான்..

""நான் கலந்துரையாடுவதற்கு தேவையான தகுதி உங்களிடம் இல்லை. என்னுடைய வாழ்நாளை உங்களுடன் சேர்ந்து வீணாக்க விரும்பவில்லை. அதனால் விலகுகிறேன். 7 நாளில் விடுவிக்க வேண்டும். அதற்கு மேல் டைம் கிடையாது..."




இந்த கடிதத்தை ஒரு வாரத்தில் வாபஸும் வாங்கி விட்டார்.

இதனை பார்த்து முதலீடு செய்தவன் உண்மையிலே புலம்பி இருப்பான். தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோம் என்று.

கடிதத்தில் அதிக இலக்கண பிழைகள். கடுமையான வார்த்தைகள், தெளிவின்மை என்று பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு சிஇஒவின் கடிதம் என்றும் சொல்ல முடியாது.

அலுவலகத்தில் மோதல்கள், அரசியல் என்பது மிக இயல்பானது தான். அதனை எப்படி அணுகுகிறோம் என்பதில் தான் உயர் அதிகாரிகளின் மேலாண்மை திறன் உள்ளது.

அதிலும் சிஇஒவிற்கு மிக அதிக அளவில் பொறுப்புள்ளது. ஏனென்றால் நிறுவனம் அவரால் தொடங்கப்பட்டாலும் பெரிய அளவில் மாறும் போது அவரை நம்பி பல பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்..

நாம் முன்னர் சொல்லியவாறு முதலீட்டாளர்கள் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டே பெரிய அளவில் மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்.

பாதியில் அதுவும் 7 நாளில் சென்று விடுவேன் என்று மிரட்டும் போது அவர்கள் செய்த பெரிய அளவு முதலீடு என்னவாகும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னரே மூன்று நிகழ்வுகள் ராகுல் யாதவ் மூலம் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்கள் இல்லாமல் நிறுவனங்களை நடத்த முடியாது. ராகுல் யாதவ் செயல் புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு பெரிய பின்னடைவாக இருக்க போகிறது.

இனி நிறுவனம், வியாபாரம் போன்றவற்றுடன் சிஇஒவின் குண நலன்களை விசாரித்து முதலீடு செய்யும் நிலையும் வரலாம்.

இதற்கு இன்றைய கல்வி முறையின் தாக்கம் என்றும் சொல்லலாம். வெறும் மதிப்பெண்களுக்காகவும், சீட் கிடைப்பதற்காகவும் படிக்கும் கல்வி முறையில் வாழ்வியல் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

இது தான் பொறுமையின்றி தான் தோன்றித்தனமாக செயல்பட வைக்கிறது.

சிறு வயதில் திருக்குறள் படிக்கும் போது ஏண்டா இதை எல்லாம் வைக்கிறார்கள். என்ன பயன் என்று தோன்றும். இப்பொழுது புரிகிறது. கணிதமும் அறிவியலும் தான் வாழ்க்கை இல்லை என்று.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை 
போற்றி யொழுகப் படும்.

விளக்கம்:
பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: